Thursday 8 May 2014

ஊருக்கொரு பள்ளிகட்டி, பிள்ளைகளின் வயிற்றுக்கு சோறும்போட்டு கல்விக்கண் திறந்த காமராஜரும்;

பள்ளிப்பிள்ளைகளை கடத்தி கழுத்தில் சயனைடு குப்பி கட்டி போருக்கு அனுப்பிய பிரபாகரனும் ஒன்றா?!?!?!

அறுபடவேண்டிய தொப்புள் கொடியும்!
விடுபடவேண்டிய தமிழக அரசியலும்!!

முதல்பகுதி

நாடோடி

இந்த தொடரை எழுதவேண்டும் என்று பலமாதங்களுக்கு முன்பே நாடோடி நினைத்து அறிவித்திருந்தாலும் அதற்கான உரிய தரவுகளைத் தேடவும் இதை கோர்வையாக எழுதவும் போதுமான நேரமின்மையால் இது தொடர்ந்து தள்ளிப்போனது. இப்போதும்கூட நிலைமை அதுவே. ஆனாலும் இதை அவசரகதியில் மேம்போக்காகவேனும் எழுதவேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

காரணம் நாடோடி நீண்டநாட்களாக அச்சப்பட்டபடி "பிரபாகரணீயம்" என்கிற மோசமான புற்றுநோய் பெரியாரியம் என்கிற இருப்பவற்றிலேயே மிகச்சிறந்த சமூக/அரசியல் மருத்துவத்தால் பராமரிக்கப்பட்டுவரும் தமிழக அரசியல் என்னும் ஆரோக்கியமான உடலை மோசமாக பாதிக்கத் துவங்கியிருப்பதன் அபாய அறிகுறிகள் தெளிவாகத் தென்படத்துவங்கியுள்ளன. இனிமேலும் இந்த பேராபத்தை உரியமுறையில் சொல்லி எச்சரிக்காமல் இருப்பது தவறு என்றே படுகிறது. அதனாலேயே இந்த தொடரை கிடைக்கும் நேரத்தில் கோர்வையாக இல்லாவிட்டாலும் முன்பின்னாகவாவது பதிவு செய்வது அவசர அவசிய செயலாகப்படுகிறது.

நாடோடியைப்பற்றி தெரியாதவரகளுக்கு கூடுதல் தன்னிலை விளக்கமாக, இந்த கட்டுரைத்தொடர் எழுதும் நாடோடிக்கும் திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திமுகவில் யார் சொல்லியும் இந்த தொடர் எழுதப்படவும் இல்லை. திமுகவில் யார் சொன்னாலும் இந்த தொடர் நிற்காது. இதில் நாடோடியின் நிலைப்பாடும் மாறாது. ஏனென்றால் இந்த தொடரின் நோக்கம் திமுகவை காப்பதோ, புலிகளின் பிம்பத்தை உடைப்பதோ அல்ல. பிரபாகரணீயம் என்கிற அரசியல் புற்றுநோயை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அகற்றுவது. அந்த கட்டியும் நம் உடலில் வளர்ந்த நம் உடலின் பகுதி தானே என்று பாசம் பாராட்டியதும் போதும். அதனால் 7 கோடி தமிழ்நாட்டுத்தமிழர் பட்டதும் போதும்.

அதேபோல கண்டிப்பாக இது திமுக ஆதரவுக்கட்டுரைத்தொடரல்ல. திமுகவின் தவறுகளும் இதில் சுட்டிக்காட்டப்படும். அது சுயவிமர்சனம். காரணம் திமுகவைப்போலவே, நாடோடியும் புலிகளை கடந்தகாலத்தில் ஆதரித்த நபரே. அதை சொல்வதில் எந்த கூச்சமும் இல்லை.

அடுத்து இது விடுதலைப்புலிகள் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எதிர்ப்புத்தொடரும் அல்ல. மாறாக, ஈழத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்னெடுத்த ஆயுதவழியிலான ஈழத்தமிழர் விடுதலை அரசியல் என்பது மிக மோசமாக தோற்றுப்போனதற்கு யார் காரணம் என்பது குறித்தும், அந்த தோல்வியில் இருந்து தமிழ்நாட்டுத் தமிழர் கற்கவேண்டிய அடிப்படை அரசியல் பாடங்கள் எதையுமே கற்காமல், ஈழத்தில் மிகமோசமாக தோற்றுப்போன, குறைந்த பட்சம் இரண்டு லட்சம் தமிழர்கள் அநியாயமாக கோரமாக கொல்லப்படக்காரணமாக இருந்த பிரபாகரன் பிராண்ட் தமிழ்த்தேசிய அரசியலை தமிழ்நாட்டு அரசியலில் முன்னெடுப்பதில் இருக்கும் பன்முக ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிப்பதே இந்த கட்டுரைத்தொடரின் முதன்மையான நோக்கம்.

அதிலும் குறிப்பாக, திராவிட இயக்கம் புத்திசாலித்தனமாக சுமார் நூறாண்டுகாலம் போராடி வெற்றி பெற்று சாதித்துக்காட்டியிருக்கும் தமிழ்நாட்டு அரசியலில், ஈழத்தமிழரின் ஒட்டுமொத்த தோல்வியின் சின்னமான பிரபாகரனை கொண்டுவந்து முன்னிறுத்த முயலும் செயலானது, ஆரோக்கியமாக ஆயிரம் கிளைபரப்பி, நூற்றுக்கணக்கான விழுதுவிட்டு ஆழமாக வேரூன்றி பரந்து விரிந்து நிற்கும் மிகப்பெரிய ஆலமரத்தின் ஆணிவேருக்குள், ஆலகால விஷத்தை கொண்டுவந்து பலவந்தமாக புகுத்தும் செயல் என்பதை எச்சரிப்பதே இந்த தொடரின் நோக்கம்.

முதலில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தமிழ்நாட்டின் தற்கால பெரியாரியவாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்? எந்த அளவுக்கு போற்றுகிறார்கள்? என்பதை கொஞ்சம் பார்ப்போம்.

நாடோடி பெரிதும் மதிக்கும் முகநூல் நண்பர் திராவிடப் புரட்சி. (அவருக்கும் நாடோடிக்கும் முகநூல் நட்பு மட்டுமே. நாடோடி யாரென அவருக்கும் தெரியாது. அவர் யாரென நாடோடிக்கும் தெரியாது. இருவரின் சுய அடையாளங்கள் இங்கே தேவையும் இல்லை) பெரியாரியம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு ஆழமான பெரியாரியவாதி. பேசுவதை சொந்த வாழ்விலும் கடைபிடிக்கும் நேர்மையாளர் என்பதை அவரது முகநூல் பதிவுகள் சொல்கின்றன. பிரபாகரன் குறித்த அவரது முகநூல் பதிவு கீழே.

திராவிட புரட்சி: "காமராஜர் படத்தை வைத்துக்கொண்டு, கலைஞரை திட்டும் காங்கிரசாருக்கு பதிலடி தருவதற்காக...

அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டு, கலைஞரை திட்டும் செ.கு.தமிழரசனுக்கு பதிலடி தருவதற்காக....

நாம் காமராஜரையும் அம்பேத்கரையும் திட்டுவது எப்படி நியாயமன்றோ....

அதுபோலத்தான்....

பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு கலைஞரை திட்டும் முட்டாள்களுக்கு பதிலடி தருவதற்காக...

பிரபாகரனை திட்டுவதும்!

திராவிடப்புரட்சியின் இந்த முகநூல் நிலைத்தகவலைப் படித்ததும் உண்மையில் நாடோடிக்கு கோபம் வரவில்லை. ஆற்றமாட்டாத வேதனை ஏற்பட்டது. அத்தோடு ஒருவித ஆயாசமும் சேர்ந்தே ஏற்பட்டது. பகுத்தறிவுப்பாசறையின் இளம் தலைமுறை அறிவுஜீவிகளின் பிரபாகர பக்தி, அவர்களின் "பகுத்து அறியும் திறனை" இப்படி சிதைத்து சின்னாபின்னமாக்கி வைத்திருக்கிறதே என்கிற சொந்தவீட்டுக்கவலையும் சேர்ந்து நாடோடியை நடுங்க வைத்திருக்கிறது என்பதே உண்மை.

திராவிடப்புரட்சி ஒருவர் என்றல்ல, லக்கிலுக் யுவா, பிரகாஷ் ஜே பி என்று இன்னும் பலப்பல திக, திமுகவினரும் ஏறக்குறைய இதேரீதியிலான முகநூல் பதிவுகளை பதிந்திருந்தனர். எல்லோரின் வாதமும் ஏறக்குறைய ஒன்றே. பிரபாகரனை விமர்சிக்காதீர்கள். அவர் நல்லவர். வல்லவர். மாவீரர். அவர் பெயரை வைத்து அரசியல் செய்பவர்கள் தான் கெட்டவர்களே தவிர பிரபாகரன் கெட்டவரல்ல. தயவுசெய்து பிரபாகரனை விமர்சிக்காதீர்கள். இதுதான் இவர்கள் அனைவரின் பொதுவான வாதம். வேண்டுகோள்.

நாடோடியின் நிலைப்பாடு இந்த பார்வையின் நேர் எதிர் முனை. ஈழத்தமிழர் பிரச்சனை என்பது இடியாப்பச் சிக்கலானதற்கும்;

ஈழத்தமிழர்கள் இரண்டு லட்சம் பேருக்கும் மேலாக மிகக்கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டதற்கும்;

இன்று ஈழத்தில் எஞ்சி நிற்கும் தமிழர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முட்டுச்சந்தில் திக்குத்தெரியாமல் நிற்பதற்கும்

அவர்களில் சுமார் ஒரு லட்சம் இளம் பெண்கள் வாழ்விழந்து, உடல் உறுப்புக்கள் இழந்து விதவைகளாகவும், உடல் ஊனமுற்றவர்களாகவும் கிடந்து வாழ வழியின்றி உழல்வதற்கும் முழுமுதற்காரணம் பிரபாகரன்.

முழுக்க முழுக்க பிரபாகரன் நன்கு திட்டமிட்டு உருவாக்கிய ஒரு பிரச்சனையை, பிரபாகரனால் உருவான சிக்கலைப்பற்றி அலசும்போது பிரபாகரனைப்பற்றி பேசாமல் எப்படி பேசுவது?

நேருக்கு நேர் நின்று போர்புரிந்த நேர்மையான எதிரி வாலியை மரத்தில் மறைந்து நின்று கேவலமாகக் கொன்ற; நிறைமாத கர்ப்பிணியான சீதையை காட்டுக்கனுப்பிய, சமஸ்கிரதம் கற்ற சம்பூகன் என்கிற தலித்தை சிரமறுத்த ராமனைப்பற்றி பேசாமல் ராமாயணத்தைப் பற்றிமட்டும் பேசுங்கள், விமர்சியுங்கள், தயவு செய்து ராமனை தொடாமல், ராமனை விமர்சிக்காமல் ராமாயணத்தைப் பற்றி பேசுங்கள் என்பது எவ்வளவு அறிவுக்கு பொருந்தா வாதமோ அதே அளவு அறிவுக்கு பொருந்தா வாதமே இவர்களின் பிரபாகரனை விமர்சிக்காமல் ஈழப்பிரச்சனை பற்றி பேசுங்கள் என்னும் வாதம்.

இராமாயணத்தைப்பற்றிய பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிடர் இயக்கத்தவர்களின் விமர்சனம் ராமனைத்தொட்டதா? ராமனைத்தொடாமல் ராமாயணத்தை மட்டும் விமர்சித்ததா?

இவர்களின் இந்த வாதத்தின் அடிப்படையின் ஆணிவேர் 1980களில் ஆரம்பிக்கிறது. நாடோடியின் தனிப்பட்ட பார்வையில் திராவிடர் இயக்கமும் அதன் அரசியல் தலைமைகளும் அறிவுஜீவிகளும் செய்த மிகப்பெரிய வரலாற்றுத்தவறு "தமிழர் ஒற்றுமை, விடுதலை" என்கிற பெயரில் பிரபாகரனையும், அவரது விடுதலைப்புலிகளையும் கொண்டுவந்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் பரப்பியது. ஆரம்பத்தில் பிரபாகரனையும் புலிகளையும் கொண்டாடி பாமரனிடம் கொண்டு சேர்த்தது திகவும் திமுகவும். அதுவும் இவர்கள் எல்லோருமே தம் சொந்தக்காசில் இந்த பொதுச்சேவையை செய்தார்கள் என்பது 2009க்குப்பிறகு ஈழத்துக்காக காசு வாங்கிக்கொண்டு "களமாட" கிளம்பியிருக்கும் இளம் தலைமுறையினருக்குத் தெரியாது.

வீணாய்ப்போன விடுதலைப்புலிகளுக்காக கொளத்தூர் மணி, பேரறிவாளனைப் பெற்றதாய் அற்புதம் அம்மாள் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பம், சுபா சந்திரன் போன்ற தமிழ்நாட்டு ஊடக புகைப்படத்துறையின் முடி சூடா மன்னன், ஏதுமறியா ஏழை அப்பாவியான இளம் தலைமுறை புகைப்படக்கலைஞன் ஹரிபாபு, ராஜீவ் கொலை நடந்த பின்னர் ஒரு வாரகாலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டளவில் அடி உதைபட்டு குடியிருந்த வீடு, பயிர்செய்த வயல்கள், லாரிகள், டிராக்டர்கள், அலுவலகங்கள் எல்லாம் எரிந்து நடுத்தெருவில் நின்ற லட்சக்கணக்கான திமுக தொண்டர்களின் இழப்புக்களையெல்லாம் கணக்கு போட்டோமானால், எத்தனை கோடிகள் இழப்பு வரும் என்று யாருக்காவது தெரியுமா? இவர்கள் எல்லாம் புலிகளுக்காக இழந்த சொந்த வாழ்வு, சொத்துக்கணக்கு, இழந்த நேரம் இவற்றை கணக்கிட்டு இழப்பீடு கொடுக்கத்தான் முடியுமா? இவர்கள் எல்லாம் எதற்காக இத்தனை இழப்புக்களை சந்தித்தார்கள்? இவர்களுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் என்னதான் தொடர்பு? அந்த தொடர்பை ஏற்படுத்தியவர்கள் யார்?

வேறு யார். திராவிடர் இயக்க அரசியல், இலக்கிய, அறிவுஜீவிகள் தான் அந்த தொடர்பை ஏற்படுத்தியவர்கள். என்ன சொல்லி அதை செய்தார்கள்? முதலில் பெரியாரின் பேரன் பிரபாகரன் என்று துவங்கிய திராவிடர் இயக்க ஆளுமைகளின் பிரபாகர துதிபாடல், இன்று பெரியாரைவிட பிரபாகரன் பெரிய ஆள் என்பதாக பரிணமித்திருக்கிறது அல்லது தமிழக இளைஞர்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய விபரீதம் என்பதை உறைக்கும் விதத்தில் சொல்லி உறைக்கவைப்பதே இந்த தொடரின் நோக்கம்.

பார்ப்பண ஆதிக்கத்தை எதிர்த்து உருவான திராவிடர் இயக்க வழிவந்த அரசியல் கட்சியான அதிமுகவின் தலைமைப்பதவிக்கு வந்த ஜெயலலிதா தேர்தலில் வென்று தமிழக முதல்வரான பின்னர், தமிழக சட்டமன்றத்தில் ஒருமுறை இப்படி அறிவித்துக்கொண்டார். "நான் பாப்பாத்தி தான். அதேசமயம் நான் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியின் நவீன வடிவம்".

ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பில் வெளிப்பட்டது அவரது பிறவிக்குணமான பார்ப்பண ஆணவம் என்றால் திராவிடபுரட்சியின் மேற்கண்ட நிலைத்தகவலில் வெளிப்படுவது பெரியாரியப்பார்வை அல்ல; போற்றத்தக்க, ஏற்கத்தக்க தர்க்க வாதமோ, நிறுவக்கூடிய நியாயமோ அல்ல. பிரபாகரன் மீதான கண்மூடித்தனமான பக்தி. என்ன இருந்தாலும் பிரபாகரன் "நம்ம ஆள்" என்கிற நல்லெண்ணம். 25 ஆண்டுகாலம் நாமே வளர்த்த பிரபாகரனின் பேருருவை நம் கண் முன்னே நாமே அழிக்கலாமா அல்லது அழிக்க அனுமதிக்கலாமா என்கிற பொதுநலன் சார்ந்த பதற்றம். பதற்றம் என்றுமே நியாயத்திற்கு எதிரி. அதுவே திராவிடப்புரட்சியின் இந்த நிலைத்தகவல் மீண்டும் ஒருமுறை நமக்கு நிரூபித்திருக்கிறது.

அதனால் தான் பழுத்த பெரியாரியவாதியான அவர், கொலையை மட்டுமே தனது ஒரே அரசியல் ஆயுதமாக கொண்டு செயற்பட்ட பிரபாகரனை கொண்டுவந்து, கொலை செய்யாமல் அரசியல் செய்வதை மட்டுமே தமது வாழ்நாள் லட்சியமாக கொண்டு செயற்பட்டு வெற்றிபெற்ற ஒப்பிடவே முடியாத இந்திய/தமிழக அரசியல் ஆளுமைகளுடன் அநாயாசமாக பிரபாகரனை ஒப்பிட்டு நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

காந்தி, நேரு, அம்பேட்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி இவர்களின் தலைமையிலான அரசியல் எழுச்சி, அணிதிரட்டல், பொதுமக்கள் போராட்டங்கள், நிர்வாக அணுகுமுறைகள் உள்ளிட்ட எல்லா செயற்பாடுகளிலும் இருந்த பொதுத்தன்மை என்பது தமது செயற்பாடுகள் எதுவானாலும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மிகக் குறைவாகவும், நன்மைகள் அதிகமாகவும் இருக்கவேண்டும் என்பதில் இவர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். அதன் அடிப்படையிலேயே அவர்கள் திட்டம்போட்டார்கள். செயல்பட்டார்கள். சாதித்தார்கள்.

இதில் பிரபாகரன் அணுகுமுறை நேர் எதிரானது. அவருக்கு தமிழ் மக்கள் என்றுமே ஒரு பொருட்டல்ல. தனது இறுதி இலக்கை அடைய அவர் பயன்படுத்திய பல ஆயுதங்களைப்போலவே மக்களும் அவரது போராட்ட ஆயுதங்களில் ஒன்று. ஆரம்பம் முதலே அவரது அணுகுமுறை அதுவே. அதனால் விளைந்ததே இத்தனை இழப்பும்.

அப்படி சக மனிதர்களை அவர் வெறும் போர்க்கள ஆயுதங்களாக மட்டுமே பார்த்ததன் விளைவுதான் அவர் ஊரான் வீட்டு பிள்ளைகளை அந்த பெற்றோருக்கு தெரியாமல், அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பலவந்தமாக பள்ளிகளில் சென்று பிடித்துக்கொண்டுபோய் அவர்களின் கழுத்தில் பலவந்தமாக சயனைடு குப்பி கட்டி, கையில் துப்பாக்கி கொடுத்து போர்க்களத்துக்கு அனுப்பினார். இதில் அவருக்கு எந்தவிதமான உறுத்தலும் இருந்தது இல்லை. இருந்ததாக சொல்வதெல்லாம் பச்சைப்பொய் என்பதற்கு இறுதிப்போரில் இரண்டுலட்சம் தமிழர்களை மனிதக்கேடயமாக பிடித்து வைத்த பிரபாகரனின் குரூரமே நிதர்சன சாட்சி.

அதுவும் பிரபாகரனின் சொந்தப்பிள்ளைகள் எல்லோரும் போரின் இறுதிவரை உயிருடன் இருந்தார்கள் என்பது மட்டுமல்ல, வன்னிப்பகுதியில் புலிகள் "ஆட்சி" (?) செய்தபோது அங்கே இருந்த மற்ற தமிழ்க்குழந்தைகளைவிட மிக மிக வசதியாக, சொகுசாக, அதிகபட்ச பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள் என்பது நன்கு நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஆனால் திராவிடப்புரட்சி பிரபாகரனுடன் ஒப்பிட்டிருக்கும் காமராஜரின் கதை என்ன? தனக்கென சொந்தக் குழந்தையில்லாதவர் காமராஜர். ஆனால் ஊரான் வீட்டுப்பிள்ளைகளையெல்லாம் தன் பிள்ளையாக நினைத்த உன்னத மனிதன் அவர். அந்த உத்தமரின் உன்னதத்தை வர்ணிக்க வார்த்தைகள் உண்டா? ஊரில் இருக்கும் குழந்தைகள் படிக்க என்ன செய்யலாம் என்று ஓயாமல் சிந்தித்த பெருந்தகையாளன் அவர். அந்த சிந்தனையின் விளைவு அவர் ஊருக்கொரு பள்ளியைத்திறந்தார்.

அதன் விளைவாக வயிற்றில் உணவில்லாமல் மூளைக்கு உணவு ஏறாது என்பதை நேரில் கண்டார்.
விளைவு திராவிடர் இயக்க ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிப்பிள்ளைகளுக்கான மதிய உணவு திட்டம் மாநிலம் தழுவிய மதிய உணவு திட்டமாக அரசு பள்ளிகளில் விரிவு படுத்தப்பட்டது.

அதன் பயன் தானே இன்று தமிழ்நாட்டு சூத்திரப்பிள்ளைகள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்று இன்று உலகமெல்லாம் பெருமைக்குரிய பின்னணியுடன் சாதனை படைத்துவருகிறார்கள்?

மதிய உணவு கொடுத்து படிக்கவைத்து உலகை வெல்லவல்லவனாக தமிழ்நாட்டு சூத்திரப்பிள்ளைகளை உருவாக்கிய காமராஜர் என்கிற கல்வி வள்ளலைக்கொண்டுபோய், படிப்பை கெடுத்து, போர்க்களத்துக்கு அனுப்பி ஒன்று நேரடியாக மேலோகம் இல்லாவிட்டால் அங்க ஈனத்துடன் அகதி என்கிற பெயரில் வெளிநாடு என்று அனுப்பிய அராஜக அரசியல்வாதியை ஒப்பிடுகிறார் நண்பர் திராவிடப்புரட்சி.

இந்த விபரீதத்தை என்ன சொல்லி விமர்சிக்க? ஆனால் விமர்சித்துத்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. யாருக்கு எங்கே வலித்தாலும் இந்த விமர்சனம் காலத்தின் கட்டாயம்.
காரணம் நோயுற்றிருப்பது தமிழக அரசியல் என்கிற நம் சொந்த உடம்பு.
அதற்கான சிகிச்சையை நாம் தான் எடுத்துக்கொள்ளவேண்டும். சிகிச்சை என்றாலே கசப்பு மருந்தும் சேர்ந்தே இருக்கும். ஆனால் நோயை விரட்டவேண்டுமானால் கசப்பு மருந்து அடங்கிய சிகிச்சையை ஏற்பதைத்தவிர உடம்புக்கு வேறு வழியில்லை. விருப்பம் இருப்பவர்கள் தொடருங்கள்.

சிகிச்சை தொடரும்.....---ethiroli thamil ...!